இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக AIR INDIA அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் AIR INDIA விமானம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா டெல்லியில் இருந்து டெல் அவிவ் வரை வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமானத்தை இயக்குகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் டெல் அவிவ் செல்லும் விமானங்களை ஏர் இந்தியா நிறுத்தியது.
இதையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு, அதாவது கடந்த 3ம் தேதி மீண்டும் சேவை தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது.
இதற்கிடையில், கடந்த வாரம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது ஏவுகணை தாக்குதலில் ஈரானின் மூத்த ஜெனரல் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய ஈரான், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.