ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதே எனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (29) மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன உட்பட வேறு சில கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், தனித்து ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காது.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஜனாதிபதியின் பொருளாதார அபிவிருத்திக்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தடைப்படும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் தாமதமாகும். எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதே எனது நிலைப்பாடு. அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டில் நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.